மதுரை வங்கிகளில் ரூ.20,000 கள்ள நோட்டுகள் கண்டுபிடிப்பு
By மதுரை
First Published : 10 September 2014 07:28 AM IST
மதுரை பொதுத்துறை வங்கிகளில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு ரிசர்வ் வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் ரூபாய் நோட்டுகள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை மேலவெளிவீதி மற்றும் காமராஜர்சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 அரசு பொதுத்துறை வங்கிகளின் சார்பில் அனுப்பிய பணத்தில் ரூ.500, ரூ.1000 ஆகியவற்றில் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் ரூ.20 ஆயிரம் மதிப்புடைய கள்ளநோட்டுகள் வங்கிக் கட்டுகளில் இருந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை ரிசர்வ் வங்கி சார்பில் மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு புகார் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.
மதுரை நகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகளவில் வங்கிப் பணத்தில் கள்ளநோட்டுகள் இருந்ததாக புகார் எழுந்தது. அதன்படி வங்கி அதிகாரிகள் கூட்டத்தை காவல்துறை நடத்தியது. வங்கியில் பணம் பெறும்போது, கள்ளநோட்டுகளை அறியும் சாதனங்களைப் பயன்படுத்தவேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு எண்ணை ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்களில் பென்சிலில் குறிக்கவேண்டும் எனவும் வாய்மொழி ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment