எபோலா வைரஸ் தென்பட்டால் ரத்த மாதிரியை சென்னை ஆய்வகத்துக்கு அனுப்ப உத்தரவு
பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஆகஸ்ட் 14, 10:34 AM IST
திண்டுக்கல், ஆக.14–
ஆப்பிரிக்க நாடுகளில் பரவிவரும் எபோலா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளன. எனினும் சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் சிலருக்கு எபோலா வைரஸ் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆப்பிரிக்க நாடான கினியாவில் இருந்து ஊர் திரும்பிய தேனி வாலிபர் பார்த்திபன் மூலம் தமிழகத்திலும் எபோலா நோய் பரவக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் அவருக்கு எபோலா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டதால் அந்த பயம் விலகியது. எனினும் அரசு மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
எபோலா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக விமான நிலையங்களில் வந்து இறங்கும் வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டினரை தமிழக சுகாதாரத்துறை மருத்துவக்குழுவினர் முழு பரிசோதனை செய்த பின்னரே பிற இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் ஏற்கனவே தமிழகத்துக்கு வந்து விட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், குறிப்பாக ஆப்பிரிக்க நாட்டினரை கண்காணித்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்தநிலையில் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்கு வருவோரிடம் எபோலா நோய் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டால் அவர்களின் ரத்த மாதிரியை எடுத்து சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வைரஸ் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மருத்துவக்கல்லூரி, அரசு தலைமை மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
மேலும் எபோலா நோய் பரவும் விதம் அவற்றின் வீரியம், அவற்றை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை, பரிசோதனை முறைகள் ஆகியவை குறித்தும் அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.
THANKS MALAI MALAR
No comments:
Post a Comment